.

ந்த மார்கழி மாசம் முழுக்க லௌகீக விஷயங்களை குறைச்சுகிட்டு கோவிலுக்கு போகணும். அதற்க்கென்றே ஒதுக்கப்பட்ட மாதம் இது. மாதம் முழுக்க போகமுடியதவங்க… என்னைக்கெல்லாம் முடியுமோ அன்னைக்கு போங்க. அதுவும் முடியாதவங்க… அவசியம் சொர்க்க வாசல் திறப்புக்காகவாவது போங்க. தமிழகத்தில் உள்ள வைணவத்  திருத்தலங்களில் நாளை காலை (Dec 24, 2012) பிரம்ம முஹூர்த்தத்தில் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஒருவேளை இந்தப் பதிவை நீங்கள் தாமதமாக பார்க்க நேர்ந்தால் பரவாயில்லே.. அடுத்த வருஷம் மறக்காம போங்க. “2013 மார்கழி மாசம் சொர்க்க வாசல் திறப்புக்கு போயே தீருவேன்” என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
சும்மா… ஒரு தரம் அவன் பக்கம் போய்  அப்படி நின்னு பார்த்துட்டு வாங்க. அதுக்கப்புறம் அவன் உங்களை மறக்கவே மாட்டான். நான் மறுபடி மறுபடி சொல்றது இது தான். ஆண்டவனை நோக்கி நாம ஒரு அடி எடுத்து வெச்சா அவன் நம்மளை  நோக்கி பத்து அடி எடுத்து வெப்பான்.
ஆரம்பத்துல ரொம்ப பர்ஃபெக்டா எல்லாராலயும் இருக்க முடியாது. இப்போ உலகம் போய்கிட்டுருக்குற சூழ்நிலையில அம்மா காஃபி கொடுக்க  அஞ்சு நிமிஷம் லேட்டானாலே அதை சாப்பிடக்கூட முடியாம வேலையே பார்க்க பறந்துடுறோம்.
அதனால ஒரு முயற்சியை எடுத்து வைங்க. விரதம் இருக்குறதோ அல்லது கோவிலுக்கு போறதோ எதுவா இருந்தாலும் மனசு முழுக்க நம்பிக்கை மற்றும் அவன் மேல அன்பு, பரோபகார சிந்தனை… இது போதும். அவன் அருள் கிடைப்பதற்கு. கலியுகத்தில் அவனருள் கிடைக்க செய்ய வேண்டிய விதிகள் மிக மிக எளிமையாக்கப்பட்டிருக்கு. அதனால ஆரமபத்துல உங்களால ஆச்சார அனுஷ்டானங்களை எல்லாம் முறைப்படி கடைபிடிச்சி சரியா செய்ய முடியலேன்னானாலும் பரவாயில்லே. போகப் போக எல்லாம் சுலபமாக கைவரப்பெறும். எடுத்தவுடனேயே கரெக்டா பண்ணனும் அப்படின்னு நினைச்சுகிட்டு நல்ல விஷயங்களை ஒத்தி போடாதீங்க.
ஓ.கே.?
நாளை வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதத்தின் சிறப்பை அறிந்தவர்கள் பலர் தற்போது அந்த விரதத்தை அனுஷ்டித்து கொண்டிருப்பீர்கள். இது பற்றி முன்னமே நான் பதிவு போட்டிருக்கணும். வேலைப்பளு காரணமா போடமுடியலே. மன்னிக்கணும்.
அப்புறம்.. இதை படிக்கிறவங்க…. செய்ய வேண்டியது என்னன்னா… முடிஞ்சா காலைல 3.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு ஏதாவது பெருமாள் கோவிலுக்கு போய் சொர்க்க வாசல் திறப்புல கலந்துக்கிறது தான். யாராவது ஒருத்தர் இதை பார்த்து செஞ்சா கூட எனக்கு சந்தோஷம். அப்படி யாராவது செஞ்சா மறக்காம இங்கே வந்து சொல்லுங்க.
விரதம் இருக்க மறந்தவங்க, இருக்க முடியாதவங்க…. நிச்சயம் அடுத்த முறை தவறாம இருங்க. விரதம் இருக்கிறதா வேண்டிக்கோங்க. நல்லதே நடக்கும்.
ஏகாதசி விரதம் எப்படி இருக்கணும் என்பது பற்றி எனக்கு தெரிஞ்ச & அங்கே இங்கே தேடின திரட்டி நாம கீழே தந்திருக்கும் தகவல்கள் உபயோகமா இருக்கும் என்று நம்புகிறேன்.
சொர்க்கவாசல்:  வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஏகாதசி விரதம் இருக்கும் முறை
ஏகாதசி விரதம் மிக மிக சிறப்புடையது. அதானால் எப்படிப்பட்ட பலன்களையும்  பெற முடியும்.
இந்த ஏகாதசி விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது ? அதற்குரிய முறை என்ன என்று பார்க்கலாம்.
தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால்,  ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது
ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று (ஒரு வேலை) பகலில் உணவருந்தலாம். அன்றிரவு உணவருந்தக்கூடாது. மறுநாள் ஏகாதசி முழுதும் உணவருந்தக்கூடாது. அதற்கடுத்த நாள் துவாதசி. அன்று அதிகாலை உப்பு, புளிப்பு சேர்க்காமல் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஏகாதசியன்று உணவில்லை என்றால் டி.வி./சினிமா பார்த்தோ கதை பேசியோ பொழுதை கழிப்பது அல்ல. திருமாலின் அவதாரப்பெருமைகளை சொல்லும் நூல்களை படிப்பது, பிரபந்தங்களை சொல்வது, பூசிப்பது என்று கழிக்கவேண்டும். ஏகாதசி நாளில் இரவிலும் தூங்கக்கூடாது. மறுநாள் துவாதசி பாரணை முடித்த அன்று பகலிலும் தூங்கக்கூடாது.
ஏகாதசியன்று செய்யக்கூடாதது:
ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
ஏகாதேசி பற்றி சிவபெருமான்
கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.
மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.
http://rightmantra.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top