.


எனக்கு மட்டும் தெரிந்த வலி ! பொன்னந்தி மாலையிலும் பூமலரும் வேளையிலும் விண்மீனைக் காவல் வைத்து வெண்ணிலவு தூங்கையிலும் கவிதை என்னும் பேய் பிடித்து ஆட்டுதடி என்னை-என் கண்ணிரண்டும் திறந்திருந்தும் காண்பதில்லை உன்னை 0 தொலைபேசி அடித்தாலும் சொந்தங்கள் சிரித்தாலும் சுளையான பணமெல்லாம் தொகைதொகையாய் வந்தாலும் மூளைக்குள் அவைசென்று முட்டுவதே இல்லை - தாய் மொழியோடு கரைதல் போல் முக்தி பிறிதில்லை 0 மற்றவரின் காயத்தில் மருந்தாகும் வேளையிலும் மற்றவரின் வேர்களுக்கு மழையாகும் வேளையிலும் இதற்குத்தான் தமிழென்று எனக்குள்ளே சொல்வேன் - நான் எவருக்கும் தெரியாமல் கைதட்டிக் கொள்வேன் 0 கருவோடு திருவில்லை கடவுள் செய்த அருளில்லை குருவோடு வந்த தமிழ் குடும்பத்துப் பொருளில்லை காளிவந்து என் நாவில் எழுதவில்லை சூலம் - சிறு கடுகளவு உள்ளதெலாம் காலம் தந்த ஞானம்! 0 முத்தத்தில் ஒதுங்கி முடிவளர்த்த முனிவர்களும் சத்தத்தில் பிதுங்கித் தனிமைகண்ட கவிஞர்களும் காடுசென்று வாழ்ந்ததற்குக் காரணங்கள் உண்டு - என் கவிவாழ நானுமொரு காடுபுகல் என்று? 0 காற்றாட வனமில்லை கால்நனைக்க நதியில்லை நாற்றாடும் வயலில்லை நனெழுத இடமில்லை சகாராவில் விட்டாலும் தமிழ்கொண்டு சேர்ப்பேன் - சுடு தார்ச்சாலை மீதும் ஒரு தாமரையாய்ப் பூப்பேன் 0 சத்தம் உறங்கிவிட்ட ஜாமத்தின் மேடையிலே புத்தம் புதுத்தலைப்பு புத்தியிலே உதிக்கையிலே வெண்ணிலவைப் பந்தாட விரையுதடி எண்ணம் - இந்த வெளிஎதிலே முடியுமென்று விளங்கவில்லை இன்னும் 0 கண்ணீரும் வியர்வைகளும் கல்விகளும் கலவிகளும் மண்ணுலகை வலம் கொண்டு வாங்கிவந்த பட்டறிவும் எல்லாமே கவிதைக்கு எரிபொருளாய் ஆச்சு - எனை இயக்குவது காற்றல்ல இலக்கியத்தின் மூச்சு 0 புவிகொண்ட ஆறுகளின் புனல்வந்து கலந்ததனால் கவிகொண்ட பிள்ளைமனம் கடலாகிப் போனதடி கவிதையென்னும் சமுத்திரத்தில் ஆவியான மேகம் - உன் காதோரம் ஒலிக்கின்ற கானங்கள் ஆகும் 0 சித்தத்துக் குள்ளே சேர்த்து வைத்த படைப்புத்தீ ரத்தத்துக் குள்ளே ரகசியமாய் எரியுதடி கட்டையிலே போகையிலும் கட்டாயம் சோதி - என் கண்ணுக்குள் கனலுமடி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top