.

  • குளக்கரை:

  • முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின
  • இந்தக் குளக்கரையில் நான் நடந்து

  • இன்றுதான் மீண்டும்
  • நடைபயில்கிறேன்

  • காலில் பரவசம்
  • நெஞ்சில் வலி

  • அன்று கூவிய பறவைகளில்
  • ஒன்றையும் காணோம்!

  • எந்த மழையில்
  • எந்தக் கோடையில்
  • மாண்டிருக்குமோ?

  • அன்று குடைபிடித்த மரங்களில்
  • ஏதுமில்லை இப்போது
  • கதவாய் - சாம்பலாய்
  • எவ்வடிவம் பூண்டனவோ?

  • உள்ளிருந்த அல்லிகள்
  • பூண்டற்று அழிந்தன
  • இலங்கைத் தமிழராய்
  • இடம்பெயர்ந்து போயினவோ?

  • அன்று
  • சேலையைக் கல்லிலும்
  • மார்பால் மனசையும்
  • துவைத்துப் பிழிந்த பெண்கள்
  • மூத்து முதிர்ந்தாரோ
  • செத்தழிந்து போனாரோ?

  • அன்று
  • தத்தியெறிந்த தவளைக்கல்
  • தூர்வாரக் குளத்தாழத்தில்
  • கிடக்குமோ? கிடக்காதோ?

  • இப்போதென் நுரையீரல் நிறைப்பது
  • சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ?
  • புழுதிசுமந்த புதிய காற்றோ?

  • அதோ
  • ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல்
  • வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள்
  • நான் அன்றுகண்ட மங்கையரோ
  • இல்லை
  • முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ?

  • அன்று
  • குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா
  • இன்று முக்குளித்தால்
  • கிட்டுமோ? கிட்டாதோ?

  • பூமியின் முகத்தில்
  • காலத்தின் கீறல்கள்
  • எல்லாம் எல்லாம்
  • மாறித் தேய்ந்தன

  • ஆனாலும்
  • நம்பிக்கையோடு தேடுகிறேன்
  • குளக்கரையில் பதிந்த என்
  • பிஞ்சுக்கால் தடங்களை


  • ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  • கனவெனப் படுவது
  • மனதின் நீட்சி

  • அது
  • ஆழியளக்கும் நாழி
  • பொய்யில் பூத்த நிஜம்
  • அன்றி
  • நிஜத்தில் மலரும் பொய்

  • * * * * *
  • என் கனவுகள்
  • வினோதமானவை

  • கோளங்களற்ற பெருவெளியில்
  • உட்கார இடம்தேடுமொரு
  • பட்டாம்பூச்சியும்

  • வீழ ஒரு தளமின்றிப்
  • பயணித்துக் கொண்டேயிருக்கும்
  • அனாதை மழைத்துளியும்

  • வாரம் ஒருமுறை வந்துபோகும்
  • என் கனவில்

  • * * * * *
  • ஆயிரம்மைல் நீளத்தில்
  • உலகராணுவ ஊர்வலம்

  • அது
  • அலையற்ற ஒரு கடலில் முடிகிறது

  • ஒவ்வொரு வீரனும்
  • கைக்கொண்ட ஆயுதம்
  • கடலில் எறிகிறான்

  • எறிந்த ஆயுதம்
  • விழுந்த இடத்தில்
  • ஆளுக்கொரு கலப்பை
  • ஆளுக்கொரு ரோஜாப்பூ
  • மிதந்து மிதந்து மேலேறி வருகிறது

  • ஒருமுறை கண்டும்
  • மறவாத கனவிது

  • * * * * *
  • மேகத்தில் ரத்தம்
  • பூக்களில் மாமிசம்
  • கத்தியில் கண்ணீர்
  • வழிந்தன கனவில்

  • கண்கசக்கி விழிக்குமுன்
  • ஜாதிக்கலவரம்

  • * * * * *

  • கொம்பு முளைத்த
  • புலியன்று துரத்தும்

  • ஆற்றில் விழுந்து
  • சேற்றில் புதைவேன்

  • கிட்ட இருக்கும் மரத்தின் வேர்
  • என்ன முயன்றும் எட்டவே எட்டாது

  • எழுந்து... எழுந்து... அழுந்தி... அழுந்தி...

  • பரீட்சை மாதம் அதுவென்பதை
  • எங்ஙன்ம் அறியுமோ என் கனவு?

  • * * * * *

  • போக்குவரத்துக்கிடமின்றிச்
  • சாலைகள் எல்லாம்
  • தானிய மூட்டைகள்

  • மூட்டைகளுக்கடியில்
  • நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள்

  • பொருளாதாரமும்
  • புரியும் என் கனவுக்கு

  • * * * * *


  • மேலே
  • மேலே
  • மேலே
  • மேலே
  • பறக்கிறேன்

  • எங்கிருந்தோ ஓர் அம்புவந்து
  • இறக்கை உடைத்து இரைப்பை கிழிக்கக்
  • கீழே
  • கீழே
  • கீழே
  • கீழே
  • விழுகிறேன்

  • ஒரு கையில் வாளும்
  • ஒரு கையில் வீணையும் கொண்ட
  • பெண்ணொருத்தி
  • என்னைத் தன் மடியில் ஏந்திக்கொள்கிறாள்

  • அடிக்கடி தோன்றும்
  • அதிகாலைக் கனவிது
  • அவள்
  • முகம்பார்க்குமுன் முடிந்துபோகிறது

  • * * * * *
  • வெயிலஞ்சும் பாலைவனம்
  • வெறுங்காலொடொரு சிறுமி
  • அவளுக்கு மட்டும்
  • குடைபிடிக்கும் ஒரு மேகம்

  • அவள் நடந்தால் நகரும்
  • நின்றால் நிற்கும்

  • இன்றவள்
  • எங்குற்றாளோ?
  • என்னவானாளோ?
  • இன்று
  • இருந்தால் அவளுக்கு
  • இருபத்தொரு வயதிருக்கும்

  • * * * * *
  • ஷேக்ஸ்பியர் வீடு...

  • பிரம்பு வாத்தியார்...

  • பிரபாகரன் தொப்பி...

  • கம்பங்கொல்லைக் குருவி...

  • கலைஞர் கண்ணாடி...

  • ராத்திரிவானவில்...

  • அராபத்தின் குழந்தை...

  • டயானாவின் முழங்கால்...

  • கொடைக்கானல் மேகம்...

  • வீட்டில் வெட்டிய ஆட்டின் தலை...

  • இப்படி...
  • அறுந்தறுந்துவரும் கனவுகள் ஆயிரம்

  • * * * * *
  • கடந்த சில காலமாய்
  • இப்படியோர் கனவு

  • இமயமலை - பனிப்பாளம்
  • தலை இல்லாத ஒற்றை மனிதன்
  • ஏந்தி நடக்கிறான் தேசியக்கொடியை

  • அடிவாரத்தில்
  • கோடி ஜனங்கள் கைதட்டுகிறார்கள்
  • நிர்வாணம் மறைத்த கையை எடுத்து

  • என்ன கனவிது?

  • வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
  • யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?

  • ----------------------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top