.


முச்சங்கங் கூட்டி …..முதுபுலவர் தமைக்கூட்டி அச்சங்கத் துள்ளே …..அளப்பரிய பொருள் கூட்டி சொற்சங்க மாகச் …..சுவைமிகுந்த கவிகூட்டி அற்புதங்க ளெல்லாம் …..அமைத்த பெருமாட்டி ! வட்டிக் கணக்கே …..வாழ்வென் றமைந்திருந்த செட்டி மகனுக்கும் …..சீர்கொடுத்த சீமாட்டி! தோண்டுகின்ற போதெல்லாம் …..சுரக்கின்ற செந்தமிழே வேண்டுகின்ற போதெல்லாம் …..விளைகின்ற நித்திலமே உன்னைத் தவிர …..உலகில்எனைக் காக்க பொன்னோ பொருளோ …..போற்றிவைக்க வில்லையம்மா! என்னைக் கரையேற்று …..ஏழை வணங்குகின்றேன்! மலையளவு நெஞ்சுறுதி …..வானளவு சொற்பெருக்கு கடலளவு கற்பனைகள் …..கனிந்துருகும் கவிக்கனிகள் இவைதலையாய் ஏற்றமுற்று …..இளந்தலைகள் வாழ்த்தொலிக்க அவைத்தலைமை ஏற்றிருக்கும் …..அன்புமிகும் என்தோழ! கூட்டத்தைக் கூட்டுவதில் …..கூட்டியதோர் கூட்டத்தில் நாட்டத்தை நாட்டுவதில் …..நற்கலைஞன் நீயிலையோ! அந்தச் சிரிப்பலவோ …..ஆளையெலாம் கூட்டிவரும் அந்தச் சிறுமீசை …..அப்படியே சிறைப்படுத்தும் சந்திரனைப் போலத் …..தகதகவென்றே ஒளிரும் அந்த வழுக்கையில்தான் …..அரசியலே உருவாகும்! எந்தத் துயரினிலும் …..இதயம் கலங்காதோய்! முந்துதமிழ் தோழ! …..முனைமழுங்கா எழுத்தாள! திருவாரூர்த் தேரினையே …..சீராக்கி ஓடவிட்டுப் பல்கும் மழைத்துளியைப் …..பரிசாகப் பெற்றவனே! கருணாநிதி தலைவ! …..கவிதை வணக்கமிது! போட்ட கணக்கிலொரு …..புள்ளி தவறாமல் கூட்டிக் கழித்துக் …..குறையாப் பொருள்வளர்க்கும் நாட்டுக்கோட்டை மரபில் …..நானும் பிறந்தவன்தான் ஆனாலும் என்கணக்கோ …..அத்தனையும் தவறாகும்! கூட்டுகின்ற நேரத்தில் …..கழிப்பேன்: குறையென்று கழிக்கின்ற நண்பர்களைக் …..கூட்டுவேன்; கற்பனை பெருக்குவேன்; அத்தனையும் …..பிழையென்று துடைப்பத்தால் பெருக்குவேன்; ஏதேதோ …..பெரும்பெரிய திட்டங்கள் வகுப்பேன்; வகுத்ததெலாம் …..வடிகட்டிப் பார்த்தபின்பு சிரிப்பேன்! அடடா! நான் …..தெய்வத்தின் கைப்பொம்மை! அன்றொருநாள் எந்தன் …..அப்பனோடும் என்அன்னை ஒன்றாமல் சற்றே …..ஒதுங்கிக் கிடந்திருந்தால் என்பாடும் இல்லை! …..என்னால் பிறர்படைத்த துன்பங்க ளில்லை! …..சுகமாய் அவர்கண்ட கூட்டலினால் என்னைஇங்கே …..கூட்டிவந்து விட்டுவிட்டார் கூட்டிவந்து விட்ட …..குறைமதியை என்தோழர் மேடையிலே கூட்டி …..விளையாட விட்டுவிட்டார் எத்தனையும் கூட்டி …..ஐந்தொகை போட்டுப்பார்த்தால் இத்தனைநாள் வாழ்வில் …..எதுமிச்சம்? என்அன்னை தந்த தமிழன்றிச் …..சாரம் எதுவுமில்லை ‘போனால் போகட்டும் …..போடா! இறந்துவிட்டால் நானாரோ நீயாரோ!’ …..நல்ல பொழுதையெலாம் அழுதே கழிக்காமல் …..ஆடித்தான் பார்க்கின்றேன்! கொத்தும் இதழழகும் …..கொஞ்சும் இடையழகும் சேலம் விழியழகும் …..சேர்த்துப் பிறந்திருக்கும் கோலக் கிளிமொழிகள் …..கூட்டத்தைக் கூட்டுகின்றேன்! கையில் மதுக்கிண்ணம் …..கன்னி இளங்கன்னம் காதலுக்கே தோன்றினான் …..கவிஞன்எனும் வண்ணம் இரவை பகலாக்கி …..இன்பத்தைக் கூட்டுகின்றேன்! அரசியலைப் பேசி …..ஆத்மச் சிறகுகளை உரசிக் கொதிக்கவைத்த …..உற்பாதம் தீர்ந்துவிட்டேன்! உடைந்துவிட்ட கண்ணாடி …..ஒருமுகத்தைக் காட்டாது! ஒடிந்துவிட்ட மரக்கிளையை …..ஒட்டிவைத்தால் கூடாது! காலம் சிறிதென் …..கனவுகளோ பலகோடி! காதல் ரசத்தினிலே …..கனியக் கவிபாடிக் கனவில் மிதக்கின்றேன் …..கற்பனை நீராடி! எண்ணிவந்த எண்ணம் …..எல்லாம் முடிந்ததென்று கிண்ணம் உடைந்தால்என் …..கிறுக்கும் முடிந்துவிடும்! பிறப்பில் கிடைக்காத …..பெரும்பெரும் வாழ்த்தொலியும் இறப்பில் கிடைக்காதோ? …..என்கவிக்குத் திறமிலையோ? அண்ணனுக்குப் பின்னால் …..அழுதுவந்த கூட்டமெலாம் கண்ணனுக்குப் பின்னாலும் …..கதறுவர மாட்டாதொ! ‘வாழ்ந்தநாள் வாழ்ந்தான்; …..வாழத் தெரியாமல் மாண்டநாள் மாண்டான்! …..மானிடத்தின் நெஞ்சத்தை ஆண்டநாள் ஆண்டான்! …..ஆண்டவனின் கட்டளையைத் தோள்மீதில் ஏற்றுத் …..தொடர்ந்தான் நெடும்பயணம்’ என்பாரும், ‘பாவி! …..எவ்வளவோ பொருள் சேர்த்தான் எல்லாமே தொலைத்தான்; …..எம்மைக் கதறவிட்டுப் போயினன்’ என்று …..புலம்பியழும் பிள்ளைகளும் கூட்டத்தில் சேர்ந்துவரும்! …..குழப்பம் முடிந்ததென நிம்மதியும் சில்லோர் …..நெஞ்சி பிறந்திருக்கும்! ‘ஏடா அவலம்; …..என்ன இது ஒப்பாரி?’ என்பீரோ! சொல்வேன்! …..எல்லாம் மனக்கணக்கு! கூட்டல் எனஎன்பால் …..குறித்துக் கொடுத்தவுடன் கூட்டித்தான் பார்த்தேன் …..குடைந்து கணக்கெடுத்தேன் முடிவைத்தான் பாட …..முந்திற்றே யல்லாமல் வாழ்வைநான் பாட …..வார்த்தை கிடைக்கவில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top