நவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர்நீச்சல் போட்டு பொருளாதார ரீதியில் அவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கே உரித்தான, அரிய பொக்கிஷமாக போற்றி அனுபவிக்க வேண்டிய இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர். “பருவத்தே பயிர் செய்” என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல. மகளிருக்கும் இது பொருந்தும்.
இளவயது பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள். அப்படியே 24-26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும் பிள்ளை பேறை தள்ளிப் போட நினைக்கிறார்கள். நாம் நல்ல நிலைக்கு வந்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து பெரும்பாலானவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்து கின்றனர்.
சில பெண்கள், திருமணத்திற்கு பிறகு உடனடியாக குழந்தை பெற விரும்பாமல், கருத்தடை சாதனங்களை உபயோகித்து, பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற விரும்பும் காலத்தில் அவற்றை நீக்கிக் கொண்டால் உடனடியாக கருத்தரிக்கலாம் என திட்டம் தீட்டுகின்றனர். அது அவ்வளவு சுலபம் அல்ல. இவர்கள் இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். தங்கள் தேவைகள் பூர்த்தியாகி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அவ்வளவு சுலபமாக கருத்தரிக்க இயலாது.
நீங்கள் ஏன் என்று கேள்வி கேட்கலாம்.
உடலில் மற்ற உறுப்புகளை விட பெண் இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன. பெண்ணின் நடுத்தர வயதிலேயே மாதவிலக்கு முற்றுப் பெறுதல் வந்து கருத் தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது.
பொதுவாக பெண்களுக்கு முப்பது வயதிலிருந்தே கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது. நாற்பது வயதுக்கு மேல், மேலும் அதிக சதவிகிதத்தில் வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.
பெண்ணின் வயதைப் பொறுத்து அவளது கரு முட்டைகளும் பாதிக்கப்படுகின்றன. உடல் ரீதியாகக் கருப்பை முதிர்ந்துவிடும் நிலை கருத்தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
முப்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களின் கர்ப்பம் நிலைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதில் முட்டை உருவாவது முக்கிய இடத்தை வகிக்கிறது. முட்டை வெளிப்படுவது, வயது முதிர்ந்த நிலையில் தன் கணவர் வெளிப் படுத்தும் குறைபாடுள்ள விந்தணுவோடு அது சேர முடியாமல் சிதைவது என பல பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிறது.
30 முதல் 35 வயதுக்கிடையில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதற்கு முன்னதாக கருத்தரிப்பதில் இருக்கும் வாய்ப்பை விட இருமடங்கு தள்ளிப்போகிறது. 30 வயதை தாண்டினாலே பெண்களுக்கு குழந்தை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஹார்மோன் சார்ந்த காரணிகள், மற்றும் பிற நோய்களும் ஏற்படு கின்றன.
வயது ஆக ஆக உடலின் ஆற்றல் குறைய ஆரம்பிக்கிறது. மேலும் உடலில் ஹார்மோன்களால் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. உயர் ரத்த அழுத்தம், கருப்பையில் கழலைகள், சினைப்பையின் செயல்திறன் குறைதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பங்கு வகிப்பது மாதவிலக்கு குறைபாடுகளாகும். ஹார்மோன் குறைவின் காரணமாக ஒழுங்கற்ற உதிரப்போக்கு அதாவது விட்டு விட்டு வருதல், சினைப்பையால் கருமுட்டைகளை உருவாக்க இயலாத நிலை போன்றவை ஏற்படுகின்றன.
கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுபவராக இருந்தால் அவற்றை நிறுத்திய மூன்று மாதங்களுக்குப் பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த மூன்று மாத இடை வெளியில் உடலில் உள்ள ஹார்மோன்களின் நிலை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் முப்பது வயதுக்கு மேல் கருத் தரிக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு அதிகளவில் ஏற்படுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் காரணிகள், பயணம், மன நிலைகள் போன்றவை இளம் வயதினரைவிட வயது முதிர்ச்சியடையும் நிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் கருச்சிதைவுகள் தவிர்க்க இயலாததாகி விடுகின்றன .
இளம் வயதில் கருவைச் சுமக்கும் தாயைப் போல் அல்லாமல் முதிய வயதில் கருவைச் சுமக்கும்போது சோர்வு, படபடப்பு போன்ற பிரச்சனைகள் அதிகமாகத் தோன்றுகின்றன.
முதிர் வயதுப் பெண்கள் பிரசவிக்கும்போது இடுப்புக்கூட்டுப் பகுதியிலுள்ள எலும்புகளின் விரிந்து கொடுக்கும் தன்மை வெகுவாக குறைந்துவிடுவதால் சுகப் பிரசவம் நடப்பது அரிதாகிறது. இதனால் சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தகுதியான வயதில் தாய்மை அடையாததால் பெண்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்பதாலேயே மருத்துவர்கள் தகுதியான வயதில் குழந்தைப்பேறு அடைய வேண்டும் என்ற கொள்கையை ஆதரிக்கின்றனர்.
ஆகவே தாய்மையை விரும்பும் பெண்கள் அதற்காகத் திட்டமிட சரியான வயது, தாய்மையை முழுமையாக அனுபவிக்கச் சிறந்த வயது இருபது முதல் முப்பது வயது வரைதான். அதற்கு அப்பால் வரும் ஒவ்வொரு வயதிலும் கருத்தரிப்பது என்பது சிக்கல் மிகுந்தாக உள்ளது.
இதனால்தான் நம் முன்னோர்கள் “பருவத்தே பயிர் செய்” என்றார்கள். இதை கருத்தில் கொண்டு ஏற்ற வயதில் குழந்தைப் பேறை பெற்றால்தால் தானும் ஆரோக்கியமாக இருக்க முடியும். குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.