.


  • சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
  • சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
  • ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
  • ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
  • சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
  • சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
  • யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
  • உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

  • கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
  • கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
  • பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
  • பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
  • வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
  • விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
  • மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
  • மின்சாரம் போகாத இரவு கேட்பேன்

  • தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
  • தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
  • விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
  • விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
  • மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
  • மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
  • பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
  • போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்

  • கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
  • குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
  • மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
  • மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
  • வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
  • வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
  • பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
  • பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்

  • அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
  • அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
  • உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
  • உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
  • முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
  • மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
  • பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
  • பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்

  • முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
  • முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
  • எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
  • இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
  • தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
  • தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
  • இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
  • இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

  • வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
  • வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
  • தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
  • தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
  • மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
  • மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
  • ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
  • ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்
23 Jul 2014

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top