- காற்றை நுரைக்க வைக்கிறாய்
- காயப்பூக்கள் பூப்பிக்கிக்கிறாய்
- வெறுமை நிரப்புகிறாய்
- மாயைக்குள் மெய்யாகிறாய்
- கடவுளர்க்கு நிஜம் சொல்கிறாய்
- மிருகங்களுக்குக் கனவு தருகிறாய்
- தாவரங்களின் தலை கோதுகிறாய்
- மேகங்கள் பீச்சுகிறாய்
- மூங்கிலில் வண்டு செய்த
- புண்ணில் பண்ணிசைக்கிறாய்
- பிறையை வளர்ப்பிக்கிறாய்
- விண்மீன்கள் தூங்கவைக்கிறாய்
- எங்கள்
- மனப்பாறை இடுக்குகளில்
- தேன்கூடு கட்டுகிறாய்
- உன் வருகைக்கு எங்கள்
- கண்ணிமைகள் தாழ்ந்து
- கம்பளம் விரிக்க
- கண்ணீர் ஆங்காங்கே
- திரவமலர் தெளிக்க
- புல்லரிக்கும் உரோமங்கள்
- எழுந்து நின்று வரவேற்க
- உனக்குத்தான் எத்தனை
- ராஜமரியாதை இசையே!
- * * * * *
- நாவுக்குச் சிக்காத அமிர்தம்
- நீ நாசிக்குச் சிக்காத வாசம் நீ
- கண்ணுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
- ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ
- நீயே சொல் இசையே
- செவியே போதுமா?
- நான்கு புலன் உபரியா?
- மரக்கிளை அசைவில் மணிகளின் ஒலியில்
- பறவையர் பாட்டில் அலைகளின் அதிர்வில்
- மாறுவேடம் போட்டபடி
- நீயே எங்கும் நிறைந்துள்ளாய் இசையே!
- * * * * *
- நதி -
- நடந்துபோகும் சங்கீதம்
- மழை -
- அவரோகண சங்கீதம்
- மழலை -
- பிழைகளின் சங்கீதம்
- மெளனம் கூட
- உறைந்துபோன சங்கீதம்
- பூமி சுற்றிக் காற்று
- காற்று சுற்றி இசை
- இசைக்குள் மிதக்குகம்
- ஜீவராசிகள்
- * * * * *
- இசையே!
- தூங்கவை எங்களை
- உன் மயிற்பீலி விரல்கொண்டு
- மனசு தடவு
- இரத்தக் குழாய்களின்
- துருக்கள் துலக்கு
- உள்ளிருக்கும் விலங்குத்தோல்
- உரி
- மென்குணங்கள் மேம்படுத்து
- நாங்கள்
- இறுகி இறுகிக்
- கல்லாகும்போது
- இளகவிடு
- குழைந்து குழைந்து
- கூழாகும்போது
- இறுகவிடு
- நீயில்லாத பூமி
- மயானம்
- மன்னித்துவிடு
- மயானத்திலும் இசை உண்டே.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக