- 'கொல்' 'கொள்ளையடி'
- சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''தழுவு'' ''முத்தமிடு''
- கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''ஆராரோ'' ''சனியனே''
- தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''உனக்கெப்போது கல்யாணம்?''
- விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''
- வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''இன்னொரு ஜென்மம்
- என்றொன்றிருந்தால்''
- பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''கடைசியாய் எல்லாரும்
- முகம்பார்த்துக் கொள்ளுங்கள்''
- மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'
- மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- 'பாலாறு - தேனாறு'
- பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''மறக்காமல் கடிதம் போடு''
- ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''அய்யா குளிக்கிறார்''
- தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்
- 'அப்பா கோபமாயிருக்கிறார்'
- குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- 'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'
- ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்
- ''நேற்றே வந்திருக்கக் கூடாதா''
- கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- 'இனிமேல் ஆண்டவன் விட்ட வழி'
- மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்
- * * * * *
- போதுமடா சாமி!
- போதும்! போதும்!
- ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
- சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்
- இனி ஒவ்வொரு சொல்லையும்
- ஒட்டடை தட்டுவோம்
- இனிமேல் வார்த்தைகளை
- இடம் மாற்றிப் போடுவோம்
- அத்தனை சொல்லிலும்
- ஆக்சிஜன் ஏற்றுவோம்
- வார்த்தை மாறினால்
- வாழ்க்கை மாறும்
- * * * * *
- முதலில்
- வாழ்க்கையிலிருந்து
- வார்த்தையை மீட்போம்
- பின்னர்
- அர்த்தத்திலிருந்து
- வார்த்தையை மீட்போம்
- வாழ்வின் நீள அகலம் கருதி
- வார்த்தைகளிலும் நாம்
- மழித்தல் நீட்டல் செய்வோம்
- மரித்தான் என்ற சொல்லை யெறிந்து
- வாழ்வை வென்றான் என்று புகல்வோம்
- தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து
- விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்
- எதிரி என்ற வார்த்தை எதற்கு?
- தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்
- சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்
- முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்
- இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்
- அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்
- நொந்த தேகம் நோயில் விழுந்தால்
- உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்
- வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்
- மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்
- நிலவைத் தொலைத்த வானம் என்பதை
- விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்
- எதிர்மறை வார்த்தைகள்
- உதிர்ந்து போகட்டும்
- உடன்பாட்டு மொழிகள்
- உயிர் கொண்டெழட்டும்
- பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
- புதிய நிலத்தில் பதியன்போடுவோம்
- புளித்த வார்த்தைகள் மாறும்போது
- சலித்த வாழ்க்கையும்
- சட்டென்று மாறும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக