- அதிகாலைக்கனவு கலைக்கும்
- அலாரத்திடமிருந்தும் -
- நித்தம் நித்தம்
- ரத்தத்தில் அச்சேறிவரும்
- பத்திரிகைச் செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் -
- தென்னைமரத்தில்
- அணில்வேடிக்கைபார்க்கும்
- குழந்தை நிமிஷத்தில்
- அலறும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் -
- ஒளிமயமான கற்பனை உதிக்கும் வேளை
- தலைமறைவாகித் தொலைக்கும் பேனாவிலிருந்தும் -
- விஞ்ஞானிபோல் புத்திசெதுக்கி
- முனிவன்போல் புலனடக்கித்
- தும்பிபிடிக்குமொரு பொற்பொழுதில்
- தொழிலைக் கெடுக்கும் தும்மலிலிருந்தும் -
- காலமே
- என்னைக்
- காப்பாற்று
- * * * * *
- ஒரே ஒரு புத்தகம்படித்த
- 'அறிவாளி'யிடமிருந்தும் -
- சிநேகிக்கும் பெரியவர்களின்
- சிகரெட் புகையிலிருந்தும் -
- எல்லாரும் கதறியழ
- எனக்குமட்டும் கண்ணீர்வராத
- இழவு வீட்டிலிருந்தும் -
- காலமே
- என்னைக்
- காப்பாற்று
- * * * * *
- பயணியர்விடுதிக்
- கொசுவிடமிருந்தும் -
- முத்திரைவிழாத அஞ்சல்தலைகளை
- உற்றுக்கிழித்துப் பயன்படுத்தும்
- உலோபியிடமிருந்தும் -
- கை கழுவ அமர்ந்த
- சாப்பாட்டு மேஜையில்
- கைகுலுங்க வரும்
- கைகளிலிருந்தும்...
- நோயுற்ற காலை
- தனிமையிலிருந்தும்-
- நோய்கள் வந்தபின்
- மருந்திடமிருந்தும் -
- மருந்து தீர்ந்தபின்
- நோயிடமிருந்தும் -
- காலமே
- என்னைக்
- காப்பாற்று
- * * * * *
- எனதுபக்கம் நியாயமிருந்தும்
- சாட்சிகள் இல்லாச் சந்தர்ப்பத்திலிருந்தும் -
- வருமானம் எல்லாம் தீரும் வயதில்
- வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் -
- என்னைப் பகையாய் எண்ணும் வாசலில்
- பரிந்துரைகோரும் பாவத்திலிருந்தும் -
- இல்லையென்றொருவன்
- தவிக்கும்பொழுதில்
- இல்லையென்று நான்
- தவிர்ப்பதிலிருந்தும்
- காலமே
- என்னைக்
- காப்பாற்று
- * * * * *
- சக ரயில் பயணியின்
- அரட்டையிலிருந்தும்
- அரட்டை முடிந்ததும்
- குறட்டையிலிருந்தும்
- காலமே
- என்னைக்
- காப்பாற்று
- * * * * *
- தீதும் நன்றும் பிறர்தர வாரா
- என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்
- என்னிடமிருந்தே
- என்னிடமிருந்தே
- காலமே
- என்னைக்
- காப்பாற்று
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக