.

  • குளக்கரை:

  1. முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின
  2. இந்தக் குளக்கரையில் நான் நடந்து

  3. இன்றுதான் மீண்டும்
  4. நடைபயில்கிறேன்

  5. காலில் பரவசம்
  6. நெஞ்சில் வலி

  7. அன்று கூவிய பறவைகளில்
  8. ஒன்றையும் காணோம்!

  9. எந்த மழையில்
  10. எந்தக் கோடையில்
  11. மாண்டிருக்குமோ?

  12. அன்று குடைபிடித்த மரங்களில்
  13. ஏதுமில்லை இப்போது
  14. கதவாய் - சாம்பலாய்
  15. எவ்வடிவம் பூண்டனவோ?

  16. உள்ளிருந்த அல்லிகள்
  17. பூண்டற்று அழிந்தன
  18. இலங்கைத் தமிழராய்
  19. இடம்பெயர்ந்து போயினவோ?

  20. அன்று
  21. சேலையைக் கல்லிலும்
  22. மார்பால் மனசையும்
  23. துவைத்துப் பிழிந்த பெண்கள்
  24. மூத்து முதிர்ந்தாரோ
  25. செத்தழிந்து போனாரோ?

  26. அன்று
  27. தத்தியெறிந்த தவளைக்கல்
  28. தூர்வாரக் குளத்தாழத்தில்
  29. கிடக்குமோ? கிடக்காதோ?

  30. இப்போதென் நுரையீரல் நிறைப்பது
  31. சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ?
  32. புழுதிசுமந்த புதிய காற்றோ?

  33. அதோ
  34. ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல்
  35. வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள்
  36. நான் அன்றுகண்ட மங்கையரோ
  37. இல்லை
  38. முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ?

  39. அன்று
  40. குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா
  41. இன்று முக்குளித்தால்
  42. கிட்டுமோ? கிட்டாதோ?

  43. பூமியின் முகத்தில்
  44. காலத்தின் கீறல்கள்
  45. எல்லாம் எல்லாம்
  46. மாறித் தேய்ந்தன

  47. ஆனாலும்
  48. நம்பிக்கையோடு தேடுகிறேன்
  49. குளக்கரையில் பதிந்த என்
  50. பிஞ்சுக்கால் தடங்களை


  51. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  52. கனவெனப் படுவது
  53. மனதின் நீட்சி

  54. அது
  55. ஆழியளக்கும் நாழி
  56. பொய்யில் பூத்த நிஜம்
  57. அன்றி
  58. நிஜத்தில் மலரும் பொய்

  59. * * * * *
  60. என் கனவுகள்
  61. வினோதமானவை

  62. கோளங்களற்ற பெருவெளியில்
  63. உட்கார இடம்தேடுமொரு
  64. பட்டாம்பூச்சியும்

  65. வீழ ஒரு தளமின்றிப்
  66. பயணித்துக் கொண்டேயிருக்கும்
  67. அனாதை மழைத்துளியும்

  68. வாரம் ஒருமுறை வந்துபோகும்
  69. என் கனவில்

  70. * * * * *
  71. ஆயிரம்மைல் நீளத்தில்
  72. உலகராணுவ ஊர்வலம்

  73. அது
  74. அலையற்ற ஒரு கடலில் முடிகிறது

  75. ஒவ்வொரு வீரனும்
  76. கைக்கொண்ட ஆயுதம்
  77. கடலில் எறிகிறான்

  78. எறிந்த ஆயுதம்
  79. விழுந்த இடத்தில்
  80. ஆளுக்கொரு கலப்பை
  81. ஆளுக்கொரு ரோஜாப்பூ
  82. மிதந்து மிதந்து மேலேறி வருகிறது

  83. ஒருமுறை கண்டும்
  84. மறவாத கனவிது

  85. * * * * *
  86. மேகத்தில் ரத்தம்
  87. பூக்களில் மாமிசம்
  88. கத்தியில் கண்ணீர்
  89. வழிந்தன கனவில்

  90. கண்கசக்கி விழிக்குமுன்
  91. ஜாதிக்கலவரம்

  92. * * * * *

  93. கொம்பு முளைத்த
  94. புலியன்று துரத்தும்

  95. ஆற்றில் விழுந்து
  96. சேற்றில் புதைவேன்

  97. கிட்ட இருக்கும் மரத்தின் வேர்
  98. என்ன முயன்றும் எட்டவே எட்டாது

  99. எழுந்து... எழுந்து... அழுந்தி... அழுந்தி...

  100. பரீட்சை மாதம் அதுவென்பதை
  101. எங்ஙன்ம் அறியுமோ என் கனவு?

  102. * * * * *

  103. போக்குவரத்துக்கிடமின்றிச்
  104. சாலைகள் எல்லாம்
  105. தானிய மூட்டைகள்

  106. மூட்டைகளுக்கடியில்
  107. நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள்

  108. பொருளாதாரமும்
  109. புரியும் என் கனவுக்கு

  110. * * * * *


  111. மேலே
  112. மேலே
  113. மேலே
  114. மேலே
  115. பறக்கிறேன்

  116. எங்கிருந்தோ ஓர் அம்புவந்து
  117. இறக்கை உடைத்து இரைப்பை கிழிக்கக்
  118. கீழே
  119. கீழே
  120. கீழே
  121. கீழே
  122. விழுகிறேன்

  123. ஒரு கையில் வாளும்
  124. ஒரு கையில் வீணையும் கொண்ட
  125. பெண்ணொருத்தி
  126. என்னைத் தன் மடியில் ஏந்திக்கொள்கிறாள்

  127. அடிக்கடி தோன்றும்
  128. அதிகாலைக் கனவிது
  129. அவள்
  130. முகம்பார்க்குமுன் முடிந்துபோகிறது

  131. * * * * *
  132. வெயிலஞ்சும் பாலைவனம்
  133. வெறுங்காலொடொரு சிறுமி
  134. அவளுக்கு மட்டும்
  135. குடைபிடிக்கும் ஒரு மேகம்

  136. அவள் நடந்தால் நகரும்
  137. நின்றால் நிற்கும்

  138. இன்றவள்
  139. எங்குற்றாளோ?
  140. என்னவானாளோ?
  141. இன்று
  142. இருந்தால் அவளுக்கு
  143. இருபத்தொரு வயதிருக்கும்

  144. * * * * *
  145. ஷேக்ஸ்பியர் வீடு...

  146. பிரம்பு வாத்தியார்...

  147. பிரபாகரன் தொப்பி...

  148. கம்பங்கொல்லைக் குருவி...

  149. கலைஞர் கண்ணாடி...

  150. ராத்திரிவானவில்...

  151. அராபத்தின் குழந்தை...

  152. டயானாவின் முழங்கால்...

  153. கொடைக்கானல் மேகம்...

  154. வீட்டில் வெட்டிய ஆட்டின் தலை...

  155. இப்படி...
  156. அறுந்தறுந்துவரும் கனவுகள் ஆயிரம்

  157. * * * * *
  158. கடந்த சில காலமாய்
  159. இப்படியோர் கனவு

  160. இமயமலை - பனிப்பாளம்
  161. தலை இல்லாத ஒற்றை மனிதன்
  162. ஏந்தி நடக்கிறான் தேசியக்கொடியை

  163. அடிவாரத்தில்
  164. கோடி ஜனங்கள் கைதட்டுகிறார்கள்
  165. நிர்வாணம் மறைத்த கையை எடுத்து

  166. என்ன கனவிது?

  167. வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
  168. யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?

  169. ----------------------------------------------------------------------------------------------------------------
23 Jul 2014

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top