விதைச்சோளம்
விடுபடும் முயற்சிகளுள் ஒன்றாக மனிதன் விவசாயம் கண்டறிந்தான். ஆனால் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் உழவர்களில் பெரும்பான்மையோர் விலங்குகளுக்கான சுகத்தையும் சுதந்திரத்தையும் கூட இழந்து நிற்கிறார்கள். அப்படி வாழப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றம்தான் இந்த நாட்டுப்பாட்டு.
ஆடி முடிஞ்சிருச்சு
ஆவணியும் கழிஞ்சிருச்சு
சொக்கிகொளம் கோடாங்கி
சொன்னகெடு கடந்திருச்சு
காடு காஞ்சிருச்சு
கத்தாழை கருகிருச்சு
எலந்த முள்ளெல்லாம்
எலையோட உதிந்திருச்சு
வெக்க பொறுக்காம
றெக்க வெந்த குருவியெல்லாம்
வெங்காடு விட்டு
வெகுதூரம் போயிருச்சு
பொட்டு மழை பெய்யலையே
புழுதி அடங்கலையே
உச்சி நனையலையே
உள்காடு உழுகலையே
வெதப்புக்கு விதியிருக்கோ
வெறகாக விதியிருக்கோ
கட்டிவச்ச வெங்கலப்ப
கண்ணீர் வடிச்சிருச்சே
காத்துல ஈரமில்ல
கள்ளியில பாலுமில்ல
எறும்பு குளிச்சேர
இருசொட்டுத் தண்ணியில்ல
மேகம் எறங்கலையே
மின்னல் ஒண்ணுங் காங்கலையே
மேற்க கருக்கலையே
மேகாத்து வீசலையே
* * * * *
தெய்வமெல்லாம் கும்பிட்டுத்
தெசையெல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையில
நெத்தியில ஒத்தமழை
* * * * *
துட்டுள்ள ஆள் தேடிச்
சொந்தமெல்லாம் வாரதுபோல்
சீமைக்குப் போயிருந்த
மேகமெல்லாம் திரும்புதய்யா
வாருமய்யா வாருமய்யா
வருண பகவானே
தீருமய்யா தீருமய்யா
தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்
ஒத்தஏரு நான் உழுகத்
தொத்தப்பசு வச்சிருக்கேன்
இன்னும் ஒரு மாட்டுக்கு
எவனப் போய் நான் கேட்டேன்?
ஊரெல்லாம் தேடி
ஏர்மாடு இல்லாட்டி
இருக்கவே இருக்கா
இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி
* * * * *
காசு பெருத்தவளே
காரவீட்டுக் கருப்பாயி
தண்ணிவிட்டு எண்ணெயின்னு
தாளிக்கத் தெரிஞ்சவளே
சலவைக்குப் போட்டாச்
சாயம் குலையுமின்னு
சீல தொவைக்காத
சிக்கனத்து மாதரசி
கால்மூட்ட வெதச்சோளம்
கடனாகத் தாதாயி !
கால்மூட்ட கடனுக்கு
முழுமூட்ட அளக்குறண்டி
* * * * *
ஊத்துதடி ஊத்துதடி
ஊசிமழை ஊத்துதடி
சாத்துதடி சாத்துதடி
சடைசடையாச் சாத்துதடி
பாழும் மழைக்குப்
பைத்தியமா புடிச்சிருச்சு?
மேகத்தக் கிழிச்சு
மின்னல் கொண்டு தைக்குதடி
முந்தாநாள் வந்த மழை
மூச்சுமுட்டப் பெய்யுதடி
தெசைஏதும் தெரியாம
தெரபோட்டுக் கொட்டுதடி
கூர ஒழுகுதடி
குச்சுவீடு நனையுதடி
ஈரம் பரவுதடி
ஈரக்கொல நடுங்குதடி
வெள்ளம் சுத்திநின்னு
வீட்ட இழுக்குதடி
ஸ்தியில சரிபாதி
அடிச்சிக்கிட்டுப் போகுதடி
குடி கெடுத்த காத்து
கூர பிரிக்குதடி
மழைத்தண்ணி ஊறி
மஞ்சுவரு கரையுதடி
* * * * *
நாடு நடுங்குதய்யா
நச்சுமழை போதுமய்யா
வெதவெதைக்க வேணும்
வெயில்கொண்டு வாருமய்யா
மழையும் வெறிக்க
மசமசன்னு வெயிலடிக்க
மூலையில வச்சிருந்த
மூட்டையப் போய் நான் பிரிக்க
வெதச்சோளம் நனைஞ்சிருச்சே
வெட்டியாய் பூத்திருச்சே
மொளைக்காத படிக்கு
மொளைகட்டிப் போயிருச்சே
ஏர்புடிக்கும் சாதிக்கு
இதுவேதான் தலையெழுத்தா?
விதிமுடிஞ்ச ஆளுக்கே
வெவசாயம் எழுதிருக்கா?
காஞ்சு கெடக்குதுன்னு
கடவுளுக்கு மனுச்செஞ்சா
பேஞ்சு கெடுத்திருச்சே
பெருமாளே என்னபண்ண?
* * * * *
0 கருத்துகள்:
கருத்துரையிடுக