மௌன பூகம்பம்
!
(தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.)
அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்
பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.
எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.
எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..
ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.
அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.
நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?
மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.
இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.
ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..
அதே நீ!
என் பழையவளே!
என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!
உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?
அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!
ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.
உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.
இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?
வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?
உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.
ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!
விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!
இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.
போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!
"நீயும் என்னைக்
காதலித்தாயா?"
0 கருத்துகள்:
கருத்துரையிடுக