வழிப்போக்கன்;
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
!
உங்கள் பூக்களை
வண்டுகளுக்கு முன்பே
வாசித்தவர் எங்கே சோலைகளே
தேயிலைக் கொழுந்து
கிள்ளியவன் சந்ததி
தேயிலைக்க் கொழுந்தாய்க்
கிள்ளப்பட்டதோ?
இன்னும்
மேகம் பாடும் மெல்லிசையாய்ப்
பொழியத்தான் பொழிகிறது மழை
நனையத்தான் ஆளில்லை
இன்னும்
கிளைகள் மீது
வசந்தம் போடும் கையெழுத்தாய்ப்
பூக்கத்தான் பூக்கின்றன் மலர்கள்
பறிக்கத்தான் ஆளில்லை.
எங்கே?
இந்த மண்ணின்
பூர்வீக புத்திரர்கள் எங்கே?
சொந்த தேசத்தில்
உயிர்களைப் புதைத்துவிட்டு
தூர தேசங்களில்...
உடல்கள் உடல்கள்
வெறும் உடல்கள்
ஈழத்தோழா
உந்தையும் தாயும்
மகிழ்ந்து குலாவி
இருந்தும் இந்நாடே
இன்று
தந்தையின் எதிரே
தாயின் துகிலை
உரிந்ததும் இந்நாடே
காதலியோடு
கைவிரல் கோத்துக்
கலந்ததும் இந்நாடே
இன்று
காதலன்
சிறைக்குள்
காதலி தரைக்குள்
முடிந்ததும் இந்நாடே
இந்த ரத்தப் பெருக்கின்
நதிமூலம் எது?
முதலில் வெடித்தது
எவர் துப்பாக்கி?
முதலில் விழுந்தது
எவரின் பிணம்?
இந்த ஆராய்ச்சிகளைச்
சோதனைக் கூடத்திற்கு
அனுப்பி விடுங்கள்
இப்போது தேவை
காயத்திற்கு மருந்து
இப்போது தேவை
தாகத்திற்கு நீர்
இப்போது தேவை
என் தோழர்களுக்கெல்லாம்
தோள்
இப்போது தேவை
இந்த
வழிப்போக்கன் வார்த்தைக்கு
மரியாதை
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்;
!
நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.
மதி எங்கே அலையும், ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும், அது யாருக்குத் தெரியும் ?
அதை அறிந்து சொல்லவும் மதியில்லை
மதி இருந்தால் அதன் பேர் விதி இல்லை..
விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை..
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷமில்லை…
எட்டு நாள் வாழும் பட்டாம்பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை.
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடமும் வாழவும் இல்லை…
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….
புன்னகை அணிந்து போரை நடத்து….
கனவு காண்பது கண்களின் உரிமை.
கனவு களைப்பது காலத்தின் உரிமை.
சிதைந்த கனவை சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல் அவரவர் திறமை.
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை.
நிறைந்த வாழ்வு நேராதிருந்தால்
வந்ததில் நிறைவது வாழ்வின் கடமை..
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….
புன்னகை அணிந்து போரை நடத்து….
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.