.

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பின்னர் அதில் கூடுதல் வசதிகளைத் தந்து வருகிறது. சென்ற மாதம், இந்தியாவில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்து பவர்கள், இது போல பயன்படுத்துபவர்களை, எந்த நாட்டில் இருந்தாலும், இலவசமாக அழைத்துப் பேசும் வசதியைத் தந்தது. இதுவரை உடனடி செய்திகளை அனுப்புவதில், உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த வாட்ஸ் அப் செயலி, தற்போது போன் அழைப்புகளையும் மேற்கொள்ளும் வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. வாட்ஸ் அப் செயலியை ஏற்கனவே தங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் பதித்து இயக்கி, தானாக மேம்படுத்தும் வசதியையும் இயக்க நிலையில் வைத்திருந்தவர்களுக்கு, இந்த கூடுதல் அழைப்பு வசதி தானாகவே அப்டேட் செய்யப்பட்டுள்ளது.



இதனை டிஜிட்டல் உலகில் VoIP ~ Voice over Internet Protocol இணைய வழிமுறையில் ஒலி வழித் தகவல் அனுப்புதல் என அழைக்கின்றனர். இந்த வசதி தானாக மேம்படுத்தப்படாத போன்களில், கூகுள் பிளே ஸ்டோர் சென்று, அப்டேட் செய்து கொள்ளலாம். இல்லை எனில்,https://web.whatsapp.com/ என்ற இணைய முகவரி சென்று அங்கிருந்து இதற்கான பைலைத் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். வாட்ஸ் அப் 2.12.19 பதிப்பு இந்த வசதியை மேற்கொண்டுள்ளது.
இதனை இன்ஸ்டால் செய்தவுடன், Chat மற்றும் Contacts டேப்களுடன் Calls என்ற டேப் இடது ஓரமாகக் காட்டப்படும். இதனை அழுத்தினால், உங்கள் தொடர்பு எண்களை உள்ளவர்களில், யாரெல்லாம், இந்த செயலியின் புதிய குரல் அழைப்பினை இயக்கிய நிலையில் வைத்திருக்கிறார்களோ, அவர்களின் தொடர்பு எண்கள் காட்டப்படும். அவர்களின் எண்களை அல்லது பெயர்களை அழுத்தினால், உடன் அழைப்பு ஏற்பட்டு, நீங்கள் அவருடன் பேசலாம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. உங்கள் இணைய இணைப்பிற்கான செலவு மட்டுமே. இது நிமிடக் கணக்கில் பார்க்கையில் மிகவும் குறைவாகவே இருக்கும். எப்படி இருந்தாலும், பன்னாட்டளவில் இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்தலாம் என்பது ஒரு கூடுதல் வசதிதானே. வெளிநாடு மட்டுமின்றி, உள்நாட்டிலும் இந்த வசதியை ஏற்படுத்திக் கொண்டவர்களூடன் பேசலாம்.
உங்களை இதே போல மற்றவர்களும் அழைக்கலாம். அழைக்கப்படுகையில், வழக்கம் போல அழைப்பு வருகையில் காட்டப்படும் அழைப்பவரின் பதியப்பட்ட படங்களும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மணி ஒலியும் கேட்கும். பச்சை நிற டேப்பை அழுத்தி பேசலாம். அல்லது சிகப்பு நிற டேப் அழுத்தி மறுக்கலாம்.
வாட்ஸ் அப் செயலியும், உங்களுக்கு வந்த அழைப்புகள், தவறிய அழைப்புகள், அவற்றின் நேரம் ஆகியவற்றைப் பட்டியலிட்டுக் காட்டும்.
முதலில் இந்த வசதி சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு, இவர்கள் மற்றவர்களுக்கு அழைப்பு (Invite) அனுப்பினால் மட்டுமே கிடைத்தது. தற்போது அனைவருக்கும் தானாகவே அப்டேட் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாட்ஸ் அப் பயனாளர்கள் எண்ணிக்கை 80 கோடியை எட்டியிருந்தது. சென்ற மூன்று மாதங்களில் மட்டும் 10 கோடி பேர் புதியவர்களாக இணைந்துள்ளனர். தினந்தோறும், இவர்களால், 3,000 கோடி செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பயனாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சிலர் வாட்ஸ் அப் செயலியை விட்டு, Viber, WeChat, LINE, மற்றும் Hike போன்ற செயலிகளுக்கு மாறினார்கள். இவர்கள் தற்போது, அழைப்பு வசதி அளிக்கப்பட்டதால், வாட்ஸ் அப் செயலிக்கே மீண்டும் வருவார்கள் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த வசதி அளிக்கப்பட்டதனால், மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று தகவல் தொழில் நுட்ப ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.
இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்களுக்கு மட்டும் தரப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்குபவர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். ஆனால், சிலர் இணையத்தில் கிடைக்கும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் மூலம் வாட்ஸ் அப்பில் இந்த வசதியைப் பெற்று வருகின்றனர்.
இந்த கட்டுரையை எழுதி முடிக்கும் வேளையில், (22/4/15 நள்ளிரவு) வாட்ஸ் அப், ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்கும் ஆப்பிள் ஐபோன்களுக்கும் இந்த வசதியைத் தந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து ஐபோன்களுக்கும் தராமல், படிப்படியாக, வரும் சில வாரங்களில் இந்த வசதி ஆப்பிள் போன்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தொடர்ந்து வரும் வாரங்களில், வாட்ஸ் அப் செயலியில் விடியோ அழைப்புகளைத் தரும் பதிப்பு 4.0.0 வெளிவரும் என்று தெரிகிறது.
சென்ற ஆண்டு, பிப்ரவரியில், வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்குவதாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 2,200 கோடி டாலர் கொடுத்து, அதனை முழுமையாகப் பெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top