.


  • தெற்கே தெற்கே ஜாதிகள் மூட்டும்
  • தீயே பற்றாதே! - பழங்
  • கற்காலத்துப் பாம்பே! எங்கள்
  • காலைச் சுற்றாதே!

  • மண்பானைகளும் மண்பானைகளும்
  • மல்லுக்கு நிற்பதுவோ - இங்கே
  • கண்ணீர்த்துளிகளும் கண்ணீர்த்துளிகளும்
  • கைகள் கலப்பதுவோ?

  • தாழ்த்தப்பட்டவர் ஒடுக்கப்பட்டவர்
  • சண்டை பிடிக்கையிலே - அங்கே
  • வீழ்த்தப் படுவதும் வெல்லப் படுவதும்
  • வேறோர் இனம(ல்)லவே!

  • முற்நூறாண்டை முன்னுக் கிழுக்குது
  • முரட்டு விஞ்ஞானம் - நாமோ
  • முந்நூ றாண்டு பின்னே செல்வது
  • முழுக்க அஞ்ஞானம்

  • அந்நிய ரோடு சண்டை கொண்டது
  • ஆறோ ஏழோதான் - சொந்த
  • மண்ணவ ரோடு சண்டை கொண்டது
  • மணலினும் அதிகம்தான்

  • செயற்கை மனிதன் செவ்வாய்த் தரையில்
  • சிற்றில் ஆடுகையில் - இங்கே
  • இயற்கை மனிதர் ஜாதிச் சண்டையில்
  • இடுப்பு முறிவதுவோ?

  • நீண்ட நாள்முன் யாரோ விதைத்த
  • நெருப்பின் மிச்சத்தில் - மண்ணை
  • ஆண்ட பரம்பரை இன்று வரைக்கும்
  • அழிந்து கருகுவதோ?

  • புதைந்த தமிழின் சங்கம் மூன்றைப்
  • புதுக்க எண்ணாமல் - நம்மைப்
  • புதைக்கும் ஜாதிச் சங்கத்துக்கள்
  • புதைந்து போவீரோ?

  • வறுமை ஏழ்மை பேதைமைக் கெதிராய்
  • வாளை எடுக்காமல் - நாம்
  • ஒருவரை ஒருவர் எரித்து மகிழும்
  • உற்சவம் நடத்துவதோ?

  • புத்தகம் ஈந்து கல்விச் சாலை
  • போக்கும் சிறுவர்களைக் - கையில்
  • கத்திகள் தந்து ஜாதிக் களத்தில்
  • கருகச் செய்வீரோ?

  • மனிதன் என்னும் நிஜத்தை நீங்கள்
  • மறந்து தொலைத்துவிட்டு - ஜாதிச்
  • சனியன் என்னும் கற்பனைக் காகச்
  • சமர்கள் புரிகுவதோ?

  • ஆயுதங்களைக் கட்டும் கைகாள்
  • அணைகள் கட்டுங்கள் - அந்த
  • ஆயுதங்களை உருக்கி உருக்கி
  • ஆலைகள் எழுப்புங்கள்

  • சிறைகள் எடுக்கும் செலவில் நீங்கள்
  • சிறகுகள் வாங்குங்கள் - வீணே
  • தரையில் சிதறும் ரத்தம் போதும்
  • தானம் புரியுங்கள்

  • முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
  • முழங்கினர் ஊருக்கு - அட
  • இன்னும் நீங்கள் திருந்தா விட்டால்
  • இலக்கியம் ஏதுக்கு?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top