.

  • கடைசியாய் ஒருமுறை
  • கூவிக்கொள்க குயில்களே!

  • கடைசியாய் ஒருமுறை
  • வான்பாருங்கள் மலர்களே!

  • இப்போது வழங்கும் முத்தத்திலிருந்து
  • இதழ்பிரிக்காதீர் காதலரே!

  • மார்புகுடிக்கும் மழலைகளைத்
  • தள்ளிவிடாதீர் தாயர்களே!

  • எது நேரக்கூடாதோ
  • அது நேரப்போகிறது

  • சிறிது நேரம்தான்...
  • பூமி சிதறப்போகிறது

  • நாலரைக்கோடி ஆண்டுகளின்
  • அடையாளச் சின்னம்
  • அழியப் போகிறது

  • சூரியக்குயவன் செய்த
  • பெரிய மண்பானை
  • உடையப் போகிறது

  • * * * * *
  • திட்டுத்திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்
  • தட்டுக்கள் எழும்
  • ஒன்றன்மீதொன்று படையெடுக்க...

  • பூமியின் வயிற்றெரிச்சலாய்க்
  • காலங்காலமாய்க் கனன்றுகிடந்த
  • அக்கினிக்குழம்புகள் விடுதலைகேட்க...

  • வெறிகொண்ட மேகங்கள்
  • விரைவதைப்போலப்
  • பாறைகள் பூமிக்குள்
  • பயணப்பட...

  • தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது
  • பூமிக்குள் ஒரு குருட்சேத்திரம்

  • * * * * *
  • பறவைகளுக்கு மூக்குவேர்த்தது
  • விலங்குகளுக்கு விளங்கிவிட்டது

  • குஞ்சுபிறக்கத் திறக்கும் முட்டைபோல்
  • பொத்துக்கொண்டது பூமியின் ஓடு

  • ஜீசஸ்! ஈஸ்வரா! அல்லா! முருகா!
  • காற்றில் சமாதியாயின கதறல்கள்

  • * * * * *
  • வான் நடுங்கியது
  • பூமியின் இடியில்

  • மேகம் நனைந்தது
  • கடல்களின் அலையில்

  • பூமியின் வயிற்றில்
  • புகுந்தன தேசங்கள்

  • கடல்களை எரித்தது
  • அக்கினிக் குழம்பு

  • குன்று பெயர்த்துக்
  • கோலி ஆடியது காற்று

  • * * * * *
  • பாளம்பாளமாய்
  • பூமி பிளக்க...

  • பூகம்ப அளவை சொல்லும்
  • ரிக்டர் வெடிக்க...

  • ஊழித்தீயின் உச்சிப்பொறிகள்
  • கண்டம் விட்டுக் கண்டம் குதிக்க...

  • அவரவர் வீடு அவரவர் கல்லறை

  • * * * * *

  • மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
  • மலை பறித்த பள்ளத்தில்
  • கடல் அள்ளி ஊற்றியது
  • பூகோளம் தெரியாத பூகம்பம்!

  • தன் சுற்று வட்டம்
  • இடவலமா வல இடமா
  • முதன்முதலில் பூமிக்குச் சந்தேகம் வந்தது


  • பட்டாசு கொளுத்திய புட்டியாய்
  • பூமிப்பந்து பொடியாதல் கண்டு
  • விசும்பியது விசும்பு

  • எல்லா மேகங்களையும் இழுத்துத்
  • தன் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டது

  • * * * * *
  • பூகோளம் அறியா பூகம்பத்திற்குச்
  • சரித்திரம் எங்கேதெரியப்போகிறது

  • பிரமிடுகளைப் பிய்த்துப்பிடுங்கி
  • மம்மிகளை எல்லாம் வெளியேற்றியது

  • உள்ளே
  • புதிய பிணங்களைப் போட்டுப்போனது

  • பசிபிக்கின் கன்னத்தில்
  • மச்சங்களாயிருந்த ஹவாய்த் தீவுகள்
  • பருக்காய் உதிர்ந்தனவே!

  • மூவாயிரம் ஆண்டு மூத்தமரங்கள்
  • வேரில்லாத பென்சில்களாய்
  • வீழ்ந்து கழிந்தனவே!

  • நிமிர்ந்ததெல்லாம்
  • சாய்ந்து போனதில்
  • சாய்ந்த ஒன்று நிமிர்ந்துகொண்டது
  • பைசா கோபுரம்!

  • * * * * *
  • அட்லாண்டிக் தூக்கியெறிந்த
  • அலையன்று விழுந்ததில்
  • சகாப்த உறக்கம் கலைந்தது - சகாரா

  • விழுந்த அலை எழுவதற்குள்
  • சகாரா பாவம் சமுத்திரமானது

  • சீனப் பெருஞ்சுவர் எடுத்துப்
  • பாக்குப் போட்டுக்கொண்ட பூகம்பம்
  • தாஜ்மகாலைச் சுண்ணாம்பாய்த்
  • தகர்த்துக்கொண்டு
  • வெற்றிலைபோட ஓடியது
  • ஆப்பிரிக்கக் காட்டுக்கு.

  • இன்னொரு கிரகம் ஏகக் கருதி
  • ஆக்சிஜன் தாண்டிய உயரம் பறந்து
  • இறந்து விழுந்தன இந்தியப் புறாக்கள்

  • உறுப்புகள் இடம்மாறிப்போன பூமி கேட்டது :
  • இது இறப்பா?
  • இன்னொரு பிறப்பா?

  • * * * * *
  • எது நைல்? எது தேம்ஸ்?
  • எது கங்கை? எது அமேசான்?
  • எது காவிரி? எது வால்கா?
  • பிரித்துச் சொல்ல நதிகள் இல்லை
  • பெயர்கள் வைத்தவன் எவனுமில்லை

  • எது சீனா? எது ரஷ்யா?
  • எது இந்தியா? எது அமெரிக்கா?
  • எது ஈரான்? எது லெபனான்?
  • பிரித்துச் சொல்ல தேசம் இல்லை
  • பிரஜை என்று யாருமில்லை

  • சுவாசிக்க ஆள்தேடி
  • அலைந்தது காற்று

  • துள்ள ஒரு மீனில்லை
  • துடித்தது அலை

  • * * * * *
  • வெறுமை...வெறுமை...
  • தோன்றியபோது
  • தோன்றிய வெறுமை
  • மீண்டும் அமீபா...
  • மீண்டும் பாரமேசியம்...

  • மனிதா!
  • வருகின்ற பூகம்பம்
  • வரட்டும் என்றாவது

  • போர்களை நிறுத்து
  • புன்னகை உடுத்து

  • பூமியை நேசி
  • பூக்களை ரசி

  • மனிதரை மதி
  • மண்ணைத் துதி
  • இன்றாவது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top