- ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,
- அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?
- *****
- அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே….
- பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா?
- இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
- *****
- சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;
- தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
- *****
- இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு
- இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு
- பகலை பூமியில் தொலைத்துவிட்டு
- இரவை வானத்தில் தொலைத்துவிட்டு
- சின்னச் சின்னக் கனவுகளை
- சிகரெட் புகையில் தொலைத்துவிட்டு,
- தன்னையே தனக்குள் தொலைத்துவிட்டு
- வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு வாலிபர் கூட்டம்.
- *****
- அறிவு தன் முயற்சியை நிறுத்திவிட்ட இடத்தில்தான்
- மூட நம்பிக்கை முளைக்கிறது.
- *****
- எந்தக் கலை வாழ்க்கையிலிருந்து வரிக்கப்பட்டதோ
- அது ஜீவனுள்ளதாய் பிறக்கும்.
- அல்லது,
- எந்தக்கலை ஜீவனுள்ளதாய் பிறக்கிறதோ
- அது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாய் இருக்கும்..
- *****
- காதல் கவிதைகள் ஒரு மொழியின் சிறகுகள்.
- எந்த மொழியிலும் காதல் கவிதையைத் தொட்டால் மட்டும் அதன் உயிர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது.
- காரணம் -
- வாழும் காதலர்கள் வாழ்ந்த காதலர்களுக்கு ரத்ததானம் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
- *****
- தனக்குள் இருக்கும் ஒன்றைத் தனக்கு வெளியே தேடும் தேடல்தான் காதல்.
- *****
- வாழ்க்கையின் வெற்றிடத்தைக் காதலால் நிரப்புங்கள்.
- வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைக் காதல் அகராதியில் கண்டுபிடியுங்கள்.
- காதலியின் உள்ளங்கையில் கவிதை எழுதுங்கள்.
- காதல் கவிதைகளால் தமிழின் எடையை அதிகரியுங்கள்,
- காதல் மனிதனின் வரமல்லவா?
- கவிதை மொழியின் உரமல்லவா?
- *****
- சப்தம் கடந்த சங்கீதம் காண
- வார்த்தை கடந்த கவிதைத்தேட
- வர்ணம் கடந்த ஓவியம் பேண
- மனசை ஆற்றுப்படுத்துங்கள்
Home
»
vairamuththu kavithai
» vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக